இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பிரிவினைவாதம் மற்றும் வன்முறை நிலவும் சூழ்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய தூதர் மற்றும் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் பாதுகாப்பை தற்போதைய கனடா அரசு உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே, இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக முடிவு செய்துள்ளோம். இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவு அளிக்கும் ட்ரூடோ அரசு மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு உரிமை உள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவான நிலையில் உள்ளது . கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் மற்ற அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன், டெல்லியில் உள்ள கனடா தூதரகத்திற்கும் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த, காலிஸ்தானுக்கு ஆதரவான ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது.
கனடாவின் இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல சவால்களை எதிர்கொள்வதால் இந்த விவகாரம் இப்போது அரசியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது என்று இந்தியா கூறியுள்ளது.
"ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அன்று கனடா தூதரகத்தில் இருந்து தகவல் ஒன்று வந்தது. கனடாவில் நடைபெற்று வரும் விசாரணையில் இந்தியாவின் தூதர் மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுக்கிறது. கனடாவில் ட்ரூடோ அரசாங்கம் மக்கள் வாக்குகளைப் பெறுவதற்காக இதைச் செய்கிறது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்தியா தனது தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் கனடாவில் உள்ள பிற தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. மேலும், இது குறித்து கனடா தூதரக ஆணையத்திற்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
திங்கட்கிழமை (அக்டோபர் 14) அன்று கனடாவின் ராஜ்ஜிய தொடர்பை நிராகரித்து, இந்தியா மிகவும் வலுவான பதிலை அளித்துள்ளது.

0 Comments