வியன்டியன்: தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் லாவோஸ் நாடு தலைமை வகிக்கிறது. இந்நிலையில், ஆசியான் - இந்தியா இடையிலான 21வது உச்சி மாநாடு மற்றும் 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவை லாவோசின் வியன்டியன் நகரில் நேற்று துவங்கின. மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
“உலகின் பல பகுதிகளில் மோதல் மற்றும் பதற்றமான சூழல் நிலவும்போது, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நட்பு, ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது,” என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஆசியான் - இந்தியா இடையிலான 21வது உச்சி மாநாடு மற்றும் 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவை லாவோசின் வியன்டியன் நகரில் நேற்று துவங்கின.
இது குறித்து சீன பிரதமர் லீ கியாங் கூறுகையில், ''நம் வளர்ச்சிக்கு சில நிலையற்ற காரணிகள் தடையாக உள்ளன. குறிப்பாக வெளிப்புற சக்திகள் நம் விவகாரங்களில் அடிக்கடி தலையிடுகின்றன. ''ஆசியாவில் பூகோள மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் மோதல்களை அறிமுகப்படுத்த அந்த சக்திகள் முயற்சிக்கின்றன. அதை தடுக்க வேண்டும். சர்ச்சைகள் சுமூகமாகத் தீர்க்கப்படுவதை உறுதிசெய்ய நாடுகளுக்கு இடையே மேலும் பேச்சு நடத்தப்பட வேண்டும்,'' என்றார்.
மாநாட்டில், தென்சீன கடற்பகுதியில் சமீபத்தில் பிலிப்பைன்ஸ் - சீன கப்பல்களுக்கு இடையே நடந்த மோதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடல் சார்ந்த சண்டையின் போது, ஐக்கிய நாட்டு சட்டத்தை நிலைநாட்டுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டு கடல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணுமாறு சீனாவுக்கு ஆசியான் தலைவர்கள் அழுத்தம் கொடுத்தனர். இதற்கு பதிலளித்துள்ள சீனா, பிராந்திய விவகாரங்களில் வெளிநாட்டு தலைவர்கள் தலையிட வேண்டாம என வலியுறுத்தியுள்ளது.

இந்த மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று லாவோஸ் சென்றார். பின்னர், 21வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
நான் 10 ஆண்டுகளுக்கு முன்பே பல முக்கிய கொள்கைகளை முன்வைத்தேன்; அது, தற்போது இந்தியாவுக்கும், ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு புதிய ஆற்றலையும், திசையையும், வேகத்தையும் தந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆசியான் பிராந்தியத்துடன் ஆன இந்தியாவின் வர்த்தகம் 1,300 கோடி டாலர் ஆக அதிகரித்து உள்ளது. இந்த 21ம் நுாற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கான நுாற்றாண்டு என நம்புகிறேன்.
உலகின் பல பகுதிகள் மோதல்கள் மற்றும் பதற்றங்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், இந்தியா- - ஆசியான் நட்பு, ஒருங்கிணைந்த உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.
இந்தியாவும், ஆசியான் நாடுகளும் அண்டை நாடுகளாகவும், உலகளாவிய பங்குதாரர்களாகவும், விரைவான வளர்ச்சியைக் கண்டுவரும் பிராந்தியமாகவும் உள்ளன.
நாங்கள் அமைதியை விரும்பும் நாடுகள் மற்றும் ஒருவருக்கொருவர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்கிறோம்.
நம் இளைஞர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உண்டாக்கி தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது. இந்தியா அதை கண்டிப்பாக செய்யும்.
இந்தியா- - -ஆசியான் உச்சி மாநாட்டிற்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:
ஆதார், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை போன்ற டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பைப் பயன்படுத்துவதில், இந்தியா தன் அனுபவத்தை ஆசியான் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துஉள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஆதரவாக, இணைய பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த உள்ளதாக, இரு தரப்பும் தெரிவித்துள்ளன.
கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள, ஆசியான் நாடுகளுக்கு இந்தியா ஒத்துழைப்பையும் வழங்க உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments