சென்னையில் இன்று (அக்டோபர் 15) காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கையின் படி, சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிககனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வினால் தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், நாளை அதிக கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையின் பல இடங்களில் 50 மில்லி மீட்டர் மழை பெய்து வரும் நிலையில், இன்னும் சில நேரங்களில் 100 மில்லி மீட்டர் மழை வரை பதிவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
தயார் நிலையில் காவல்துறை:
இன்று அதிகனமழையும் , நாளை ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளதால், சென்னையில் மீட்புப் பணிகளுக்காக காவல்துறை தயார் நிலையில் உள்ளது. மழைநீர் தேங்குவதால் பாதிக்கப்படும் 50 இடங்களை கண்டறிந்து, அந்த பகுதிகளில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் சென்னை காவல் துறையில் ஆயுத படையில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300 காவலர்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளதாகவும், இவர்கள் சென்னை மாநகரத்தில் உள்ள 12 காவல் மாவட்டத்திற்கும் பிரித்து அனுப்பப்பட்டு மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
விமான நிலைய முன்னேற்பாடுகள் தீவிரம் : சென்னை விமான நிலையத்தில் கனமழை யின்போது விமானங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தற்போது வரை விமான சேவைகளில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. நேற்று காலை 9 மணியிலிருந்து, மாலை 3 மணி வரையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு விமானங்கள் 34 விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளன. இதில் சிங்கப்பூர், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 5 சர்வதேச விமானங்கள், 29 உள்நாட்டு விமானங்கள் அடங்கும்.
சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களில் பயணிகளின் உடமைகளை ஏற்றுவது, உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவைகள் விமானங்களில் ஏற்றுவது, போன்றவைகள் தாமதம் ஆவதால், இந்த விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்கு வானிலை நிலவரத்தை கேட்டு அறிந்து அதற்கு ஏற்ப விமானங்கள் புறப்பட்டு செல்வதால் புறப்படும் விமானங்களில் தாமதம் ஏற்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
மேலும் ஏ டி ஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் சூறைக்காற்று நேரங்களில் வானில் பறப்பது பாதுகாப்பு இல்லாதது. எனவே அதைப் போன்ற சிறிய விமானங்களும் பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையத்திலிருந்து தாமதமாக புறப்பட்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும் போது வந்து தரையிறங்கும் போது ஓடு பாதைகளில் விமானங்கள் ஓடும் போது ஒடு பாதைகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதோடு அனைத்து விமானங்களையும் குறித்த நேரத்தில் பாதுகாப்பாக இயக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments